×

கழனிவாசலில் எம்எல்ஏ மாங்குடி தகவல்

காரைக்குடி, ஏப்.14: காரைக்குடி கழனிவாசல் என்ஜிஓ காலனியில் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது என எம்எல்ஏ மாங்குடி தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் உள்ள கல்வி நிறுவனங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கல்வி நகராக விளங்கும் காரைக்குடியில் சதுரங்கம், கால்பந்து உள்பட பல்வேறு விளையாட்டுகளில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற பல்வேறு வீரர்கள் உள்ளனர். அழகப்பா பல்கலைக்கழக உடற்பயிற்சி கல்லூரி விளையாட்டு மைதானத்தை, அனைத்து அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் காரைக்குடி பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் ஒரு சிறு விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தற்போது சட்டமன்ற கூட்டத் தொடரில் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கையில் காரைக்குடியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது இப்பகுதி மாணவர்கள், விளையாட்டு வீரர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து எம்எல்ஏ மாங்குடி கூறுகையில், ‘விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரைக்குடியில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். காரைக்குடிக்கு இத் திட்டத்தை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திட்டம் கொண்டு வர உறுதுணையாக இருந்த முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், கார்த்தி ப சிதம்பரம் எம்.பி ஆகியோருக்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கழனிவாசல் என்ஜிஓ காலனி பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடியில் இந்த மினி ஸ்டேடியம் அமைக்கப்படும்’ என்றார்.

மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன் கூறுகையில், ‘கழனிவாசல் பகுதியில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்காக 6 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான மண் பரிசோதனைக்காக மாதிரி அனுப்பப்பட்டுள்ளது. இங்கு தடகள ஓடுபாதை, கால் பந்தாட்ட மைதானம், வாலிபால், கபடி திடல், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், கழிப்பறைகள், நிர்வாக அலுவலகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்டவை அமைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

The post கழனிவாசலில் எம்எல்ஏ மாங்குடி தகவல் appeared first on Dinakaran.

Tags : MLA Mangudi ,Kalanivasal ,Karaikudi ,Dinakaran ,
× RELATED டோல்பூத் கட்டணத்தை தவிர்க்க...